×

உலக மக்கள் தொகையில் 200 கோடி பேர் போர் சூழலில் வாழ்கின்றனர்: ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் வேதனை

ஜெனிவா: உலக மக்கள் தொகையில் 200 கோடி பேர் அதாவது நான்கில் ஒருவர் போர் உள்ளிட்ட மோதல்கள் நடைபெறும் பகுதியில் வசிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கிறது. ஐநா கூட்டம் ஒன்றில் பேசிய அதன் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ், 2ம் உலகப்போருக்கு பின் மோதல் நிறைந்த சூழலில் அதிகளவிலான மக்கள் வசிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். உக்ரைன், ஏமன், சிரியா, மியான்மர், சூடான், ஹெய்தி உள்ளிட்ட பல நாடுகளில் நிலவும் போர் சூழலை சுட்டிக்காட்டி ஐநா பொதுச்செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். போர் சூழல் காரணமாக கடந்தாண்டில் மட்டும் 8 கோடியே 40 லட்சம் பேர் அகதிகளான அவலம் நடந்துள்ளதாக குட்டரஸ் கூறினார்.

இது தவிர இந்தாண்டு உக்ரைன் போரால் 40 லட்சம் பேர் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், 65 லட்சம் பேர் உள்நாட்டு அகதிகளாக மாறியுள்ளதாகவும் ஐநா பொதுச்செயலாளர் குறிப்பிட்டார். இந்தாண்டு மட்டும் சுமார் 27 கோடி பேர், போர் சூழலால் பாதிக்கப்பட்டு மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களாக இருப்பர் என்றும் இது கடந்தாண்டை விட 17 சதவிகிதம் அதிகம் என்றும் அவர் கூறினார். உலகெங்கும் போர், வன்முறை போன்ற மோதல்கள் மேலும் அதிகரிப்பதற்கான சூழலே தற்போது நிலவுவதாகவும் ஐநா பொதுச்செயலாளர் கவலை தெரிவித்தார். எனவே இதற்கான காரணங்களை கண்டறிந்து சரி செய்வது அவசியம் என்றும் ஆன்டனியோ குட்டரஸ் தெரிவித்தார்.

Tags : UN ,Secretary General ,Antonio Guterres , World population, 200 billion people, war environment, Guterres
× RELATED பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக...